உரிய அரசு வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார் சாந்தி சௌந்தரராஜன்

சாந்தி என்றால் சாதனையாளர் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தடகளபோட்டிகளில், நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை குவித்து, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த முதல் தமிழக பெண் வீராங்கனை, பாலின ரீதியான பொருந்தாத விதியின் மூலம், உரிய அரசு வேலைவாய்ப்பின்றி, தவிக்கிறார்.புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி, 33. தந்தை சவுந்திரராஜன், 69; தாய் மணிமேகலை, 61. சாந்திக்கு மூன்று தங்கைகள், ஒரு தம்பி உள்ளனர்.அவரிடம் பேசியபோது…

நீங்கள் தடகள துறைக்கு எப்படி ஈர்க்கப்பட்டீர்கள் ?

எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கியது. அப்பா செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நான், ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். 7ம் வகுப்பு ஆண்டு விழாவின் போது, ஓட்டப்போட்டியில் முதன்முதலாக பரிசு பெற்றேன். அந்த ஆர்வம் உலகளவில் என்னை அழைத்து சென்றது.



உங்களால் மறக்க முடியாத வெற்றிகள் ?

2006ம் ஆண்டு, கத்தார் நாட்டின், தோஹா நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகள பிரிவில் இந்தியாவிற்கான முதல் வெள்ளி பதக்கத்தை வென்றேன். அதன்பின், இதுவரை தமிழகத்தில் யாரும் பதக்கம் வெல்லவில்லை.தோஹாவில், நான் பதக்கம் வென்றபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி, 15 லட்சம் ரூபாய் பரிசளித்தார். அதற்கு முன், ஜனவரி மாதம், டில்லியில் நடந்த, 3,௦௦௦ மீ., ஓட்டப்போட்டியில் முந்தைய சாதனையை முறியடித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஒரு லட்சம் ரூபாய் பரிசளித்தார். ஆனால், நான் பதக்கம் வென்றதற்காக, அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயை, மத்திய அரசு இன்று வரை வழங்கவில்லை.




800m: 2:03.16
500m: 4:08.01
National record 3000m: 10:44.65

Gold Medal – 2005 Asian Indoor Games – 4x400 relay

Gold Medal -2006 Asian Indoor Games – 1500 meters

Gold Medal -2006 Asian Indoor Games – 4x400 relay

Gold Medal -2003 International Peace Sports Festival -5000 meters

Silver Medal- 2006 Asian Indian Games - 800 meters

Silver Medal -2006 Asian Games -800  meters

Silver Medal- 2005 Asian Athletics Championships

Silver Medal- 2004 Asian Grand Prix, Bangalore -800 meters

Silver Medal -2004 Asian Grand Prix, Pune -800 meters

Silver Medal -2003 International Peace Sports Festival -800 meters

Bronze Medal- 2003 International Peace Sports Festival – 400 meters


இப்போது உங்கள் பொருளாதாரம் எப்படி உள்ளது?
எனக்குரிய நியாயமான அங்கீகாரம் மறுக்கப்படுவது மட்டுமல்ல, அதை நிர்ணயிப்போரின் அடாவடியால், பொருளாதாரம், பொய்த்து போன கானல் நீராகி உள்ளது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், கடைக்கு சென்று ஒரு டீ வாங்கி குடிக்க கூட, பத்து முறை யோசிக்கிறேன்.

தேசிய அளவில் சாதித்த உங்களுக்கு அரசு மூலம், உரிய வேலைவாய்ப்பு கிடைத்ததா?
இதுவரை இல்லை. ஆனால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், 2007 –09ம் ஆண்டுகளில், ஒப்பந்த அடிப்படையில், 5,000 ரூபாய் சம்பளத்தில் சென்னை மற்றும் புதுக்கோட்டையில் தடகள பயிற்சியாளராக பணியாற்றினேன். மிக குறைந்த சம்பளம் என்பதால், எனது வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரி அரசுக்கு மனு கொடுத்தேன். ஆனால் பயிற்சியாளராக நிரந்தர பணி கிடைக்க, ‘என்.ஐ.எஸ்.,’ பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டியது அவசியம் என, எனது கோரிக்கையை நிராகரித்தனர்.இதனால் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு, சொந்த ஊரில் செங்கல் சூளையில் வேலை செய்தேன். அதன் பின், பெங்களூரில், ஓராண்டுக்கான தடகள பயிற்சியாளர் படிப்பை முடித்தேன். இப்போதும் தொடர்ந்து அரசு வேலைக்காக முயன்று வருகிறேன். ஆனாலும் புறக்கணிக்கப்படுகிறேன்.

எதனால் நீங்கள் புறக்கணிக்கப் படுகிறீர்கள் ?
நான் தலித். அடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவள். அதை விட கொடுமை எனது உழைப்பு, வெற்றியை ஏற்று கொள்ள மனமின்றி, பாலின ரீதியான பொருந்தாத விதி மூலம் நான், ஆண்மை தன்மை மிக்கவள் என்று, 2006ல் பிரச்னையை ஏற்படுத்தினர்.அதனால், கடந்த ஏழு ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் முடக்கப்பட்டேன். பள்ளி, கல்லுாரிகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய சான்றிதழ்கள் மூலம், நான் பெண் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவு அதிகமாக உள்ளது. அதனால் நான் ஆண் என்று பாலின பிரச்னையை கிளப்பினர். விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாகவே, தீவிர பயிற்சியால் ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவு அதிகரிப்பது இயற்கை. அதேபோன்று, கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் அதிகரிக்கும். அதனால் அவர்களை ஆண்கள் என்று கூறிவிட முடியுமா?தென்னாப்ரிக்காவின் தடகள வீராங்கனை, காஸ்டர் செமனியா 2009ல், 800 மீ., ஓட்டப்போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். அப்போது, அவருக்கும், எனக்கு ஏற்பட்டதை போன்ற பாலின பிரச்னை உருவானது. இதையடுத்து அவரது பதக்கம் பறிக்கப்படும், தொடர்ந்து ஓடுவதற்கு தடை விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு ஆதரவாக தென்னாப்ரிக்கா மக்கள், உரத்த குரல் கொடுத்தனர். அதனால் தடை, பறிப்பு இரண்டும் நடக்கவில்லை.அவருக்காக ஒலிம்பிக் போட்டியிலேயே, விதியை தளர்த்த அந்த நாடு நடவடிக்கை எடுத்தது. ஆனால், இங்கு எனக்கு குரல் கொடுக்க யாருமில்லை.சாந்திக்கு, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிரந்தர பணி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே,

தற்போதைய அவரது கோரிக்கை. பரிசீலிக்குமா அரசு?


Thanks to Chokalingam, Chennai DInamalar

2 comments:

  1. இவருடைய நிலைமை மிகவும் பரிதாபமானது. அதுவும் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இன்னும் வருத்தமாக உள்ளது. இவர் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் தடகள பயிற்றுனராக இருந்த போது நிறைய தடகள வீரர்களை பயிற்றுவித்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற வைத்து தமிழ் நாட்டிற்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற் கும் பெருமை சேர்த்துள்ளார். ஆனாலும் இவரை கண்டுகொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளும் முன்வர மறுக்கிறன. நம் நாட்டில் இவரைப்போன்று இன்னும் நிறைய திறமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு கிடக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எப்போது எல்லா விளையாட்டிற்கும் கொடுக்கப்படுகிறதோ, அப்போதுதான் இவரைப்போன்று திறமையுள்ளவர்களை வெளிக்கொண்டுவர முடியும். எது எப்படியோ, இவர்கள் அனைவருக்கும் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.

    ReplyDelete
  2. எங்களுக்கு இலங்கைல இருக்கிற தமிழர்கள் தான் முக்கியம். அவர்களுக்காக கல்லுரிய கட்டடிச்சிட்டு ஸ்ட்ரைக் பண்ண முடியும் உங்களுக்கு அப்படியெல்லாம் பண்ண முடியாது.அவர்களுக்காக குரல் கொடுத்தல் ஒட்டு கிடைக்கும், உங்களுக்கு குரல் கொடுத்தல் என்ன கிடைக்கும்.

    ReplyDelete