தீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத் - மாற்றுப் பாலின ஆன்மிகம் -1 - கோபி ஷங்கர்

 1. தீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத்

ஏப்ரல்-15-2014 அன்று  உச்சநீதிமன்றம் இந்தியாவில் அது வரையிலும் வெளிப்படையாக தெரியாத ஒரு பாலின அரசியலை முன்னிறுத்தும் விதமாக முக்கிய ஆணை ஒன்றை பிறப்பித்தது. sc1இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் விண்ணப்பித்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் ’ஹிஜிரா சமூகம்’ என்று அறியப்படும் அரவாணி சமூகத்தின் பாலினத்தை அங்கீகரிக்கும் விதம் ஆண், பெண் தவிர்த்து இனி அரவாணி சமூகத்தில் இருப்பவர்களை அரசாங்கம் மூன்றாம் பாலினம் என்று அங்கீகரிக்கின்றது என்றும் மேலும் அரவாணி சமூகத்தை பிற பிற்படுத்தப்பட்டோருடன் சேர்ப்பதாகவும் அரசியலமைப்பில் இருக்கின்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் அரவாணி சமூகத்திற்கும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் கல்வி, அரசியல், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துத்துரும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கு அரவாணி, திருநர்(திருநங்கை, திருநம்பி) மாற்று பாலினத்தவர் என்று பலதரப்பட்ட பாலின சமூகத்தை குறிக்கும் சொற்களை 130 பக்க தீர்ப்பு அறிக்கை குறிப்பிட்டாலும் மொழி, சமூக, அரசியல், மருத்துவ ரீதியாக இந்த தீர்ப்பை அணுகுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இந்த சட்டத்தில் இருக்கும் சிக்கல்கள் முதலில் திருநங்கை, மாற்று பாலினத்தவர் என்றால் யார்?
இதைப் பற்றி சரியான தெளிவு இல்லை.
திருநங்கைகளின் உரிமை பற்றி பேசுகிறது. ஆனால், யாரை திருநங்கை என்று கூறுவதில் தெளிவு இல்லை.
ஆணிலிருந்து பெண்ணாக மாறிய மாற்று பாலினத்தவரை மையப்படுத்தி இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதை தவிர்த்து பிற பாலினத்தவர்களை இந்த சட்டம் கருத்தில் கொள்ளவில்லை. பிற பாலினங்களை பற்றி இந்த தீர்ப்பில் குறிப்பு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு மொழி ரீதியாக அவர்களை குறித்து வார்த்தை தெளிவின்றி அமைந்துள்ளது.
ஹிஜிரா, இனக், அரவாணி, திருநர், மாற்று பாலினத்தவர் என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அதில் புலப்படும் அர்த்தம் வேறாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது மேற்கூறிய அனைத்து பாலின அடையாள சொற்களையும் ஒரு பொருள்பட அணுகுவதுதான் இதில் உள்ள பிரச்சனை.
இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பானது பிறப்பால் பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்கள் சார்ந்து வரும் பிற பாலின அடையாளங்களுக்கும் இடையிலிங்க நிலையுடன் பிறப்பவர்களுக்கும் எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. cover3நுணுக்கமான பல்துறை சார்ந்த சட்ட சிக்கல்களை இந்த தீர்ப்பு  கண்டு கொள்ளவில்லை. பால்-புதுமையினர் என ஒரு கண்ணுக்குத் தெரியாத மக்கள் கூட்டத்தின் இருப்பானது இந்த தீர்ப்பின் ஒரு புள்ளி அளவு கூட பதிவு செய்யப்படவில்லை. அமைப்புரீதியாக எங்கும் நிலவும் வன்முறைக்கு மூன்றாம் பாலினம் என அடையாளப்படுத்தப்படுபவர்களின் ‘ஜமாத்’ எனும் அமைப்பும் விதிவிலக்கல்ல. ஆனால் ஜமாத் எனும் ஹிஜிரா மற்றும் அரவாணி சமூகத்தினர் வாழும் அமைப்பில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றியோ ஒடுக்குதல் பற்றியோ இந்த தீர்ப்பு கேள்வி எழுப்பவில்லை. இந்த சமூகம் சார்ந்த ஜமாத் எனும் கட்டமைப்பில் இருக்கும் தேக்கநிலையை அழித்து இந்த அமைப்பை திறந்த அமைப்பாக்கும் வரை திருநர், மாற்று பாலினத்தவர், ஹிஜிரா, அரவாணி எனப்படும் இவர்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்கவோ சமூகக் கட்டமைப்பில் தெளிவான பெரும் பங்காற்றவோ இயலாது.
பெரும்பாலான பால்புதுமையினர் தங்களை திருநர் என்று நினைத்து ஜமாத் எனும் கட்டமைப்பில் தான் வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே அதை அணுகாமல் பெரும்பாலான திருநங்கை சமூகம் வரவேற்றாலும் எந்த விதமான பெரும் மாற்றத்தை இந்த சட்டத்தால் மாற்ற இயலாது. மாறுபட்ட புதிதான சமூக சிக்கல்களுக்கே இது விழி வகுக்கும். மாறாக அரசு சாரா நிறுவனங்களுக்கும் பல்வேறு தனிப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கும் வசதி செய்வதாய் அமையும். அது மட்டுமல்ல  இந்தியாவில் பாலின அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
130 பக்கங்களுக்கு மேலான ஒன்றோடு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை அறிக்கையாக தனது தீர்ப்பில் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். பெரும்பாலும் வெளிப்படையாக கண்ணுக்கு தெரிந்த ஆணிலிருந்து பெண்ணாக மாறும் திருநரின் பிரச்சனைகளை மற்றும் மையப்படுத்தும் இந்த தீர்ப்பானது சிறுபான்மையினர் என்றால் யார்? என்கிற பிரச்சனையை எந்த அளவு தீர்க்கமாக அணுகியுள்ளது?  ஒரு குறிப்பிட்ட குழு  ஒரு சிறுபான்மையினம் சமூகத்தில் பெரும்பான்மை வகிக்கும் பொழுது உண்மையான சிறுபான்மையினராக எந்த அடிப்படை தேசிய உரிமைகளும் இல்லாமல் இடையிலிங்க மக்கள் பால்புதுமையினர் போன்ற பல பாலினம் சார்ந்த சமூகங்களை மொத்தமாக ஒடுக்கப்படுவது நிகழ்கிறது. இவர்களின் வாழ்க்கை நியாயங்கள் இன்னும் சமூக பார்வைக்கே வரவில்லை.
காரணம் இங்கு திருநராகவும், பால் புதுமையினராகவும், மாற்று பாலினத்தவராகவும்,swapna1அரவாணிகளாகவும் சாதித்தவர்கள் ஒரு சிலரே. அப்படி சாதித்த ஒரு சிலரும் முக்கியமான திருநங்கைகள் தங்களின் வெற்றிக்கு பின் தங்களை மட்டுமே முன்னிறுத்தி கொள்கின்றனரே தவிர ஆதரவிற்காக, அங்கீகாரத்திற்காக தவிக்கும் பிற பாலினத்தவரையோ ஏன் சம திருநங்கைகளை கூட கைதூக்கி விடுவதில்லை. இந்திய திருநர் சமூக போரட்டத்தில் பெரும் பங்காற்றியவர் திருநங்கை ஸ்வப்னா. டி.என்பி.சி தேர்வை வெற்றிகரமாக எழுதிய முதல் திருநங்கை இவரே. அவர் கூறுகிறார் “நான் என்னைப் பற்றி பேசுவதை விட என் (ஒடுக்கப்பட்ட) பாலினத்தைப் பற்றி பேச வாய்ப்பு கேட்கிறேன். என்னுடன் சேர்ந்த இதர பாலினத்தவரின் உரிமையையும் கேட்கிறேன். எண்ணிக்கையில் இத்தகையவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர்களுக்கான அனைத்து அடிப்படை குடியுரிமைகளை பெற இந்த நாடு வழி செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.
”பாலினம்” என்றால் என்ன? ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் தான் உள்ளனவா?
இல்லை அதற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றனவா?
இருக்கின்றன! எக்கச்சக்கமாக இருக்கின்றன!
அவற்றை அடுத்த வாரம் காண்போம். 

1 comment: