மறைக்கப்பட்ட பக்கங்கள் (நூல் அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வு)

Designed by Prof. Dr. Prabhakar Vedamanikam, The American College
கலைடாஸ்கோப்பில் நேற்று மாலை கோபிசங்கரின் "மறைக்கப்பட்ட பக்கங்கள்: பால், பாலினம்,பால் ஒருங்கிணைவு" நூல் அறிமுகம் நடை பெற்றது. தமிழ் மொழியில் பால்புதுமையினர் பற்றி பேசும் முதல் நூல் இது.
பால்புதுமையினர் சார்ந்தும், ஓர் பால் ஈர்ப்பு பற்றிய தெளிவான பார்வையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல். வரலாற்றெங்கிலும் காணப்படும் தரவுகளையும், தொன்மங்களையும் மீள்பார்வைக்கு உட்படுத்துகிறார் கோபி சங்கர்.
நிறுவன சமயங்களின் நெருக்கடி எவ்வாறு இயல்பான இயற்கையான பாலினங்கள் மற்றும் பால் ஈர்ப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் மேலை நாடுகள் முன்னெடுத்து தீர்வு கண்ட போராட்டங்களையும் வரிசைப்படுத்துகிறார்.
அடித்தளமக்கள் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்நூல் தமிழில் முதலில் வெளி வந்துள்ளது சிறப்பு.
தொடர்ந்து நடைப்பெற்ற உரையாடல் இன்னும் தீவிரமாக இருந்தது. வழக்கத்தை விட அதிக பார்வையாளர்கள் கலந்துக்கொண்டர்.
பாலின அடிப்படையிலான அடித்தள மக்களின் உரிமைகளை கோருவதிலும், போராட்டங்களை முன்னெடுப்பதிலும் கோபி சங்கர் சிறந்த முன்னுதாரணமாக கருதுகிறேன்
இந்நூல் அமெரிக்கன் கல்லூரி பாடவரைவுதிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. - கார்த்தி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 
------------------------------
நேற்று கலைடாஸ்கோப்பில் 'மறைக்கப்பட்ட பக்கங்கள்' எனும் புத்தகம் எழுதியிருக்கும் கோபி சங்கருடன் ஒரு சந்திப்பு. அமெரிக்கன் கல்லூரியின் எந்நாளும் மாணவரான தன்னைப் பாலியல் மறுப்பாளன் என்று அழைத்துக் கொள்கிறார், கோபி. மூன்றாம் பாலினம் என்ற சொல்லே தவறு என்றும், 58 வகையான பாலியல் மாற்றுகள் இருப்பதாகவும் சொன்னார். குடும்பங்களில் பாலியல் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை, மாலிக்காபூர் காலம், ஔரங்கசீப் காலம், மதுரை மீனாட்சியின் மூன்று தனங்கள், ' பேடி' என்ற சொல்லின் வேர், தடகள வீராங்கனை சாந்திக்காக சர்வதேச நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள், எழுத்தாளர் அருந்ததி ராயுடனான முரண்பாடு... என்று பல விஷயங்களை தூய தமிழில் husky voice ல் அழகாக எடுத்துரைத்தார். பொதுவெளியில் பலர் குறிப்பாகப் பாலின மறுப்பாளர்களே பேசத் தயங்குகிற, பேச மறுக்கிற பல விஷயங்களைப் பேசினார். நாடு முழுவதும் இருக்கும் இம் மாதிரியான சமூகங்களை அவற்றின் வாழ்வியல் முறைகளை விரிவாகவும் தெளிவாகவும் சொன்னார். சிருஷ்டி அமைப்பின் மூலம் இவ்வகை நபர்களுக்கு உதவி வருவதாகவும் குறிப்பிட்டார். - Suresh Kathan, Madurai
-----------------------------
சென்னை புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. இப்புத்தகக் காட்சியின் சிறந்த வெளியீடாக நான் கருதும் ஒரு புத்தகத்தை நண்பர்களுக்கு அறியப்படுத்த விரும்புகிறேன். அது, கோபி சங்கர் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கும் "மறைக்கப்பட்ட பக்கங்கள்: பால்.பாலினம்.பாலியல் ஒருங்கிணைவு" என்ற புத்தகம்.
பால், பாலினங்கள் தொடர்ப்பான புரிதல்கள் நமக்கு குறைவு என்பதை விட அறவேயில்லை என்பதே உண்மை. மையப்படுத்தப்பட்ட பாலினங்களான ஆண், பெண் என்பவைகளோடு இவ்வுலகில் ஐம்பதிற்கும் அதிகமான பாலினங்கள் இருக்கின்றன. வரலாற்றுடனான அவர்களின் தொடர்பிலிருந்து நிகழ்காலத்தில் அவர்களின் இருப்பு, மறுக்கப்படும் அங்கீகாரங்கள், எதிர்க்கொள்ளும் துயரங்கள், சவால்கள் வரை இந்நூலில் கோபி சங்கர் எழுதியிருக்கிறார்.
இதுவரை நாம் அறியாத ஒரு விடயத்தை பேசுப் பொருளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் இப்புத்தகம் சிறப்படைகிறது என்றாலும் அதன் சிறப்பை மேலும் கூட்டுகின்ற மற்றொரு காரணமும் இருக்கின்றது. அது இந்நூலின் ஆசிரியர் கோபி சங்கர் பற்றியது. கோபி சங்கர் ஓர் இண்டர்செக்ஸ் நபர். பிறக்கும் போது பிறப்புறுப்பு தெளிவில்லாமலோ அல்லது இடைப்பட்ட நிலையிலோ பிறக்கும் குழந்தைகளை இடையிலிங்கத்தவர்கள் (இண்டர்செக்ஸ்) என்கிறார்கள்.
யாரோவொருவர் இச்சிறுபான்மை சமூகத்தைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் அச்சமூகத்திலிருந்து வரும் ஒருவர் எழுதுகையில் அது கூடுதல் முக்கியத்துவமும், அசல்தன்மையுடன் அதன் உள்ளடக்கங்களும் வீரியம் பெறுகின்றன.
எழுத்தாளர் மருதன் இப்புத்தகத்தை பற்றி எழுதியிருக்கும் குறிப்பை இதனுடன் இணைக்கிறேன். - சுந்தர் காந்தி, சென்னை
------------------------------------------
பால்-பாலினம்-பாலியல் ஒருங்கிணைவு (Sex-Gender-Sexual Orientation) பற்றிய நூல் ஒன்று
‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்துள்ளது. அரவாணிகள் அல்லது மூன்றாம் பாலினம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல்கள் தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களுக்குள்ளாகத்தான் தொடங்கியுள்ள சூழலில் இந்நூல் பாலினங்கள் பற்றிய புரிதலை அதிகரித்துள்ளது ( பலரைக் கூடுதலான குழப்பங்களுக்கும் ஆளாக்கக்கூடும்). ஆண், பெண் மற்றும் திருநங்கை, திருநம்பி எனும் மூன்று பாலினத்தவர் தவிர்த்து மேலும் 25 க்கும் மேற்பட்ட பாலினங்கள் உண்டு என்பதையும் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கத்தைய கல்விப்புலங்களில் ‘Gender Queer’ என்ற பகுப்பின் கீழ் நடந்துவருவதையும், சுட்டுகிறது. இந்தியாவில்(ஆங்கிலம் தவிர்த்து) தமிழில்தான் இது தொடர்பான முதல்நூல் வெளிவருவதும் இது தொடர்பான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கூடுதல் தகவல்களாகும். (Gender Queer - பால் புதுமையினர்) மூன்றாம் பாலினத்தவரைக் குடிமக்களாக அங்கீகரித்து ரேஷன் அட்டைகள் வழங்கியதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடியல்லவா?
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் சாத்தியமாகியுள்ள சூழலில், அந்த மூன்றாம் வகைக்குள்ளும் தங்களைப் பொருத்திக்கொள்ள இயலாமல் அடையாளக்குழப்பத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமானது என்கிறார் நூலாசிரியர். பாலுறுப்புக்குழப்பங்களுடன் பிறக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் பெற்றோர்களோடு மருத்துவர்களுக்கும் கூட சரியான புரிதல் இருப்பதில்லை. ஆண் பெண் இருவருக்குமான உடலியல் அம்சங்களோடு பிறக்கும் அத்தகைய குழந்தைகள் ‘இடையிலிங்கத்தவர்’ (Intersex) என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 1986 தொடங்கி 5ஆண்டுகளில் 35 குழந்தைகள் இடையிலிங்கத் தன்மையுடையனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா முழுமைக்குமான இத்தகைய குழந்தைகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படவில்லை. உத்தேசமாக இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 10000த்திற்கும் மேல் இத்தகைய குழந்தைகள் பிறந்த சிலமணி நேரங்களுக்குள் ‘செக்ஸ் செலக்டிவ் சர்ஜரி’ எனும் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்களாம். இதுபோலவே பல்வேறு பாலின வகைமைகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்தி அவர்களை இயல்பாக வாழ அனுமதிக்கவேண்டும் என்பதே இந்நூலின் ஆதார நோக்கமாக அமைகிறது.
ஆண், பெண் மற்றும் பிற பாலினத்தவருள் ஒருவர்… ஆக மூன்று பாலினங்களையும் ஒருங்கே கொண்டவர் - திரிநர் (Tri- gender)
எந்த ஒரு பாலினத்தையும் உணராதவர் - பாலிலி (A-gender)
அனைத்துப் பாலினங்களின் கூறுகளையும் கொண்டவராக அடையாளப்படுத்திக்கொள்பவர் - முழுநர் (Pan-gender)
இவ்வாறு 30 பாலினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விபரம் நமக்குக் கொஞ்சம் அதிர்ச்சியானதுதான். ஹார்மோன்களின் விசித்திரச்சேர்க்கைகளின் விளைவுகள் தொடர்பான அறிவியல் பூர்வமான விபரங்கள் ஒருபுறம், கிரேக்க, இந்திய புராண இதிகாசச் சான்றாதாரங்கள் ஒருபுறம், சமகால சர்ச்சைகள், புள்ளிவிபரங்கள், உலகளவிலான சட்டங்கள் என பல்வேறு திசைகளிலும் பயணம் செய்கிறார் நூலாசிரியர்.
மூன்று மார்புகளோடு தோன்றிய மதுரை மீனாட்சி தொடங்கி சீயஸ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ஹிட்லர் என விரியும் சான்றுகள் இந்நூலுக்குப் பின்னுள்ள உழைப்பைக் காட்டுகிறது. நிறைய அதிர்ச்சிகள், தகவல்கள், சர்ச்சைகள், வினாக்கள் மற்றும் சுவாரஸ்யங்களையும் கொண்ட நூல் இது.
தன்னை இடையிலிங்க (Intersex) பாலின வகைமையைச் சார்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்நூலாசிரியர் கோபி ஷங்கர் இருபதுகளைத் தாண்டாதவர். 10ஆண்டுகளுக்குமேல் இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இருந்து / இருக்க முயன்று வெளிவந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் ‘சமயம், தத்துவம் மற்றும் சமூகவியல்’ துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பாலினச் சிறுபாண்மையினரின் உரிமைகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றி வருபவர்.
எங்கள் முதுகலை பாடத்திட்டத்தில் ‘தற்கால இலக்கியம்: அண்மைப் போக்குகள்’ எனும் பாடத்தில் ஏற்கனவே உள்ள ‘மூன்றாம் பாலின இலக்கியம்’ என்பதை ‘மூன்றாம் பாலினம் மற்றும் பால் புதுமையினர் இலக்கியம்’ என்று விரிவு படுத்தியுள்ளமைக்கு இந்நூல் ஒரு காரணம். இந்நூல்
பாடநூலாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கு பாலினச்சிறுபாண்மையினர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மிக அவசியமெனக் கருதுவோர் கையிலிருக்கவேண்டிய நூல்.
நூல்- கிழக்கு வெளியீடு / 296 பக்கங்கள் / 250 ரூபாய் - 
பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம், தமிழ் துறை, தி அமெரிக்கன் கல்லூரி, மதுரை 



மறைக்கப்பட்ட பக்கங்கள் (புத்தக விமர்சனம் )

தி இந்து (03 Apr 2018

படிப்போம் பகிர்வோம்: புத்தக வடிவில் ஓர் ஆவணம்! - வா.ரவிக்குமார்

லக வரைபடத்தில் இந்தியா எங்கு இருக்கிறது என்பதை ஒரு குழந்தை தெரிந்துகொள்வதற்கு முன்பாகத் தன் உடலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது கோபி ஷங்கர் எழுதியிருக்கும் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ புத்தகம். காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற இடையிலிங்கத்தவரான (Inter sex person) கோபி ஷங்கர், அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் மன்றங்களிலும் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு குறித்து நிகழ்த்திய சொற்பொழிவுகள், சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், மாற்றுப் பாலினப் பிரமுகர்கள் பலரின் விரிவான பேட்டிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தப் புத்தகம்.
2015-ல் கோபி இந்திய நாடாளுமன்றத்துக்கு மாற்றுப் பாலினத்தவர் மசோதா தாக்கல் செய்ய சாட்சிக்காக அழைக்கப்பட்டவர். ஏற்கெனவே இவருடைய சில கட்டுரைகள் வர்ஜினியா பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை. தற்போது ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ நூலிலிருந்து சில பகுதிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் இளமுனைவர் ஆராய்ச்சிக்குப் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு இடம்பெறவிருக்கிறது.

இருமைக் கொள்கை சரியா?

பிறந்த குழந்தை ஆணாக இருந்தால் நீலவண்ணத் தொட்டிலில் வைப்பது, பெண் என்றால் இளஞ்சிவப்பு தொட்டிலில் வைப்பதில் தொடங்கி இந்த இரண்டு பாலினங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையை ஒட்டியே மருத்துவம், அறிவியல், வரலாறு எல்லாம் எழுதப்படுவது சரியா என்னும் கேள்வி இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தைப் படித்து முடிக்கும்போதும் நம்முள் இயல்பாக எழுகிறது. பெண்னைக் குறிக்கும் XX குரோமோசோம், ஆணைக் குறிக்கும் XY குரோமோசோம் இவை தவிரவும் பல சேர்க்கைகளில் குரோமோசோம்கள் மனிதர்களை தீர்மானிக்கின்றன்.
ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதுமான ஈர்ப்பைத் தவிரப் பல்வேறு விதமான ஈர்ப்புகளைக் குறிக்கும் பாலினங்கள் இருப்பதாக இந்நூலில் குறிப்பிடுகிறார் கோபி ஷங்கர்.
திருநர், திருநங்கை, திருநம்பி, பால்புதுமையர், பால் நடுவர், முழுநர், இருநர், திரிநர், பாலிலி, திருநடுகர், மறுமாறிகள், தோற்றப் பாலினத்தவர், முரண் திருநர், மாற்றுப்பால் உடையணியும் திருநர், இருமை நகர்வு, எதிர் பாலிலி, இருமைக்குரியோர், இடைபாலினம், மாறுபக்க ஆணியல், மாற்றுப்பக்க பெண்ணியல், அரைப்பெண்டிர், அரையாடவர், நம்பி ஈர்ப்பனள், நங்கை ஈர்ப்பனள், நங்கை ஈர்ப்பனன், பால் நகர்வோர், ஆணியல் பெண், பெண்ணன், இருமையின்மை ஆணியல், இருமையின்மை பெண்ணியல் என நீள்கிறது அந்தப் பட்டியல்.
இந்தப் பட்டியலில் இருக்கும் பாலினங்களுக்குப் புராணம், வரலாறு, உலகின் பல நாடுகளில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை உதாரணங்களாக நம் முன் நிறுத்துகிறார். பால்புதுமைக்குப் புராண உதாரணமாக மதுரையை ஆண்ட மீனாட்சியின் கதையைச் சொல்கிறார்.
ஆசிய நாடுகளின் எந்தவொரு கலாச்சாரமோ தத்துவமோ ஒருபால் ஈர்ப்புடையவர்களையோ பால் சிறுபான்மையினரையோ பாலியல் சிறுபான்மையினரையோ தூக்கில் இட வேண்டும் என்றோ கொல்ல வேண்டும் என்றோ சொல்லவில்லை. மறுபுறம் அவர்களை அங்கீகரித்ததும் இல்லை என்பதை விரிவான ஆய்வின் வழியாக இப்புத்தகம் பதிவுசெய்திருக்கிறது.

இடையிலிங்கத்தவரின் நிலை

பிறக்கும்போதே ஆண் இனப்பெருக்க உறுப்போ பெண் இனப்பெருக்க உறுப்போ முழுமையாக வளர்ச்சியடையாமல் இருபாலின இனப்பெருக்க உறுப்புகள் ஒருங்கே அமைந்த குழந்தைகளை ‘இடையிலிங்கம்’ (இன்டர் செக்ஸ்) என்றழைக்கிறார்கள். எண்ணற்ற இடையிலிங்கக் குழந்தைகள் கொல்லப்படுவது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இடையிலிங்க நிலையால் ஒடுக்கப்பட்ட இந்திய விளையாட்டு வீராங்கனைகள், மருத்துவப் பரிசோதனை என்னும் பெயரால் அவர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களை விவரிக்கும் அதிர்ச்சிப் பக்கங்களும் இதில் உள்ளன.

பெண் சக்தி

உலக அளவில் தவிர்க்க முடியாத சமூகப் போராளியாக உருவெடுத்திருக்கும் இர்ஷாத் மஞ்சி குறித்த கட்டுரை, மாற்றுப் பாலினத்தவரின் அணுகுமுறை சமூகத்தில் எப்படியிருக்க வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? மாற்றுப் பாலினத்தவரின் கருத்துகளை எதிர்ப்பவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எப்படி ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. அதேபோல, இந்திய தண்டனைச் சட்டம் 377 சட்டப் பிரிவுக்கு எதிராகப் போராடிவரும் ‘நாஸ்’ அறக்கட்டளையின் நிறுவனர் அஞ்சலி கோபாலன் உடனான பேட்டியும் கவனத்துக்குரியது.

பெரும்பான்மைதான் சரியா?

பெரும்பான்மையாக உள்ள விஷயத்தைப் பின்பற்றும் மக்கள், சிறுபான்மையாகச் சிலர் பின்பற்றும் விஷயங்களை விசித்திரமாகவும் பாகுபாடோடும் அணுகுவது எப்படி உலக இயல்பாக ஆகியிருக்கிறது என்பதையும், மாறாத அத்தகைய கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் இந்நூல் உரக்கச் சொல்கிறது. பால்புதுமை சமூகம் தொடர்பாக இத்தகைய தவறான கருத்துகள் சமூகத்தில் நிலவுவதையும் அத்தகைய கருத்துகள் பால்புதுமையினருக்கு உள்ளேயே பலவித முரண்பாடுகளை ஏற்படுத்துவதையும் கோபி குறிப்பிடுகிறார்.

அறிவியல் என்ன சொல்கிறது?

பலவிதமான ஈர்ப்புகள் குறித்து அறிவியலின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் ஒரு கட்டுரை விளக்குகிறது. “ஒருபால் ஈர்ப்புக்கான முழுமையான காரணத்தை இன்னும் யாராலும் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவரின் மரபணுக்களைக் கருவில் இருக்கும்போது மாற்றும் திறனும், குழந்தை பிறந்தபின் மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தீர்மானிக்கும் திறனும் கொண்ட EPI Marks கருப்பையில் இருக்கும். பாலினம் தொடர்பான மாற்றங்களை EPI Marks உண்டாக்கும் என்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்” என்னும் தகவலும் உள்ளது.
ஹிட்லர் வெறுத்த இருவர், அலெக்ஸாண்டரின் தன்பாலின ஈர்ப்புளவர் மீதான காதல், மைக்கேல் ஏஞ்சலோவின் மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள், தன்பால் உறவாளரான மகனின் தாய்க்கு, ‘உங்கள் மகனின் இந்த உணர்வு இயல்பானதுதான்’ என்பதை விளக்கி சிக்மண்ட் ஃபிராய்ட் எழுதிய கடிதம்… எனப் பாலினச் சிறுபான்மையினர் உலக அளவில் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகள், எங்கெல்லாம் நிலைமை மாறியிருக்கிறது, ஆங்கிலேயர்கள் காலத்தில் போட்ட 377-வது சட்டப் பிரிவு அந்த நாட்டிலேயே இல்லை எனும் விவரம், மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளில் மதமும் அரசியலும் எப்படிப் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன என்பதையும் நம் கண்முன் நிறுத்துகின்றன, நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள்.
‘மறைக்கப்பட்ட பக்கங்க’ளைப் படிப்பதன் மூலம் ‘நம் உடல் நம் உரிமை’ என்னும் கருத்து நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்!
மறைக்கப்பட்ட பக்கங்கள் - பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு
கோபி ஷங்கர்
விலை : ரூ.250
கிழக்கு பதிப்பகம், சென்னை -14.
தொடர்புக்கு:
044 - 4200 9603